சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி 50 இடங்களில் 256 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங் கள் மற்றும் முக்கிய தெருக்களில் 87 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆன்லைன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23,213 இரண்டு சக்கர வாகனங்கள், 1,508 மூன்று சக்கர வாகனங்கள், 1,629 நான்கு சக்கர வாகனங்கள், 290 வணிக ரீதியிலான வாகனங்கள் கண்டறியப்பட்டு இரண்டு நாட்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது, ஆயுதப்படையை சார்ந்த 200 பாதுகாப்பு படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், Paytm, RT-GS போன்றவற்றின் மூலம் வாக்காளர்களுக்கு பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டால் வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 360 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,300 வாக்குப்பதிவு எந்திரங்கள், 360 ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
வாக்குப்பதிவின்போது 50 மையங்களில் உள்ள 256 வாக்குச் சாவடிகளில் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 307 அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்-1 நிலையில் 307 அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்-2 நிலையில் 307 அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்-3 நிலையில் 307 அலுவலர்கள் மற்றும் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்-4 நிலையில் 103 அலுவலர்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலுவலர்களாக 307 அலுவலர்கள் என மொத்தம் 1,638 மத்திய-மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தலை கண்காணிக்க 6 பறக்கும் படைகள், 12 நிலைக் கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும்பட்சத்தில் இந்த குழுக்கள் அதிகரிக்கப்படும்.