நன்னிலம் அருகே கறி விருந்தில் மோதல்: வாலிபர் குத்திக் கொலை
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடி வடக்கு தெருவை சேர்ந்த துரை என்பவர் இறந்து விட்டார். அவரது 16-ம் நாள் காரியமும், கருமாதியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கறிவிருந்து பறிமாறப்பட்டது.
இதில் பனங்குடி வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சரவணன் (35) கலந்து கொண்டார். விருந்தில் தனக்கு கறி சரியாக வைக்கவில்லை என வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அதே தெருவை சேர்ந்த மாரிமுத்து கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.
இது குறித்து நன்னிலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக் கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

