பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். அரசு பஸ் டிரைவர். இவரது மகன் தினேஷ்குமார்(19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்(18) வருண்(19) ஸ்ரீஹரி(16) சூரியா(19)ஆகியோருடன் நெல்லித்துறை அடுத்துள்ள விளாமரத்தூர் குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். அவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன், ஏட்டு தங்கவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணிநேரம் போராடி தினேஷ்குமார் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com