மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி பலி - உறவினர்கள் போராட்டம்

அருமனை அருகே மர்ம காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி ஷைமா
மாணவி ஷைமா
Published on

அருமனை:

அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு, தானிமூடு பகுதியை சேர்ந்தவர் சாலமன். கூலித்தொழிலாளி.

சாலமனின் மகள் ஷைமா (வயது19). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஷைமாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

நோய் குணமாகாததால் மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட மாணவி ஷைமாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பிற்பகலுக்கு மேல் ஷைமாவின் உடல் நிலை மோசமானது. மாலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஷைமா இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் ஷைமாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்து விட்டதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் குதித்தனர். அங்கு அக்கம் பக்கத்தினரும் திரண்டதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆஸ்பத்திரி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அருமனை மற்றும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்றனர்.

தக்கலை டி.எஸ்.பி. மகேந்திரன் மற்றும் அதிரடி படை போலீசார் விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பின்னர் மாணவியின் உறவினர்களுடன் தக்கலை டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெற்றோர் விரும்பினால் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்று பிரேத பரிசோதனை செய்யும் படியும் அறிவுறுத்தினார். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மாணவியின் பெற்றோர், மகளின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக கூறினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com