‘சின்னதம்பி’ யானை ரெயில் நிலையத்தில் புகுந்தது - மீண்டும் கும்கி உதவியுடன் பிடிக்க முடிவு

மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்த சின்னதம்பி யானையை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. #ChinnathambiElephant
‘சின்னதம்பி’ யானை ரெயில் நிலையத்தில் புகுந்தது - மீண்டும் கும்கி உதவியுடன் பிடிக்க முடிவு
Published on

உடுமலை:

கோவை கணுவாய் பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானையை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையை லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர்.

ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது.

கடந்த 31-ந்தேதி சின்னதம்பி யானை மெதுவாக நடந்து அருகில் உள்ள ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது.

பொள்ளாச்சி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரம் போராடி அங்குள்ள கோபால்சாமி மலைப்பகுதியில் விரட்டி விட்டனர்.

வனத்துறையினர் அதே பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்தனர். இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை அதே வனப்பகுதியில் இருந்தது. நள்ளிரவுக்கு பின்னர் மலையில் இருந்து இறங்கி விவசாய பயிர்கள் அதிகம் உள்ள உடுமலை நாலாமூளை சுங்கம் பதிக்கு மெதுவாக நடந்தது.

யானை ஊருக்குள் நுழைந்ததை அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடுமலை வனத்துறையினரும் இணைந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

யானை எரிசனம்பட்டி பகுதி வரை நடந்து சென்றது. சாந்தமாக உள்ள சின்னதம்பி யானை நேற்று மாலை வரை தீபாலாபட்டியிலேயே நின்றது. பின்னர் தளி, கம்பளாம்பட்டி, மனுப்பட்டி, குமாரபாளையம் வழியே அமராவதி வனப்பகுதியை நோக்கி சென்றது. மருள்பட்டி, ஆலாம்பாளையம், கணக்கம்பாளையம், கண்ணம நாயக்கன் பாளையம், மைவாடி வரை நடந்து சென்றது. அங்குள்ள சர்க்கரை மில் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு தின்று அங்கே முகாமிட்டது.

பின்னர் காலை 9 மணி முதல் அங்கிருந்து வெளியேறி நடக்க ஆரம்பித்தது. காலை 10 மணியளவில் மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி ரெயில் நிலையத்துக்குள் சின்னதம்பி யானை நுழைந்தது. யானையை பார்த்த பொதுமக்கள், ரெயில் பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆனால் யானை சாதுவாக நின்றது.

இதையடுத்து பொதுமக்கள், ரெயில் பயணிகள் யானையை போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். யானை அருகே பொதுமக்கள் செல்லாதபடி வனத்துறையினர் பாதுகாப்பாக உள்ளனர். யானையை ரெயில்நிலையத்தில் இருந்து வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 300 கி.மீட்டர் தூரம் சுற்றியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் திலீப் கூறியதாவது:-

கோவை தடாகம் பகுதியில் சுற்றியபோது இருந்த ஆக்ரோ‌ஷம் ஆனைமலை டாப்சிலிப்பில் விட்டபோது இல்லை. ஆனைமலையில் இருந்து உடுமலை வரை வந்தபோதும் சேதம் ஏற்படுத்தவில்லை. பொள்ளாச்சி மற்றும் உடுமலை வனத்துறையினர் 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று கும்கிகள் உதவியுடன் மீண்டும் சின்னதம்பி காட்டுயானையை மீட்டு டாப்சிலிப்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்பின்னரும் ஊருக்குள் நுழைந்தால் முகாமில் பாதுகாக்கப்பட்டு கும்கியாக மாற்ற முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வனவிலங்கு நல ஆர்வலர்கள் கூறும்போது,

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் மனிதர்களை அடிக்கடி பார்த்து பழகி விட்டது. இது தவிர தென்னை, வாழை, ரேசன் கடைகளில் உள்ள அரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றதால் அதன் உணவு பழக்கம் மாறி விட்டது. தற்போது பொள்ளாச்சி மற்றும் உடுமலை வனப்பகுதியில் சுற்றித்திரிவதால் இங்கு பலாப்பழங்களை தின்று வருகின்றன.

இதனால் சின்னதம்பி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று வசிக்க வாய்ப்பு இல்லை. 300 கி.மீட்டர் தூரம் கடந்தபோதும் மனிதர்களை தாக்கவில்லை. எந்த பொருட்களையும் உடைத்து நாசம் செய்யவில்லை. சாதுவாக மாறிவிட்டதால் முகாம்களில் பாதுகாக்கப்பட்டு பின்னர் அதை கும்கியாக மாற்றுவதே சிறந்தது என்று கூறினர்.

முதுமலை வனப்பகுதியில் இருந்து அமராவதி வனப்பகுதிவரை நடந்து சென்ற சின்னதம்பி யானையை அந்த பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் கதாநாயகன்போல் கொண்டாடி வருகிறார்கள். #ChinnathambiElephant

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com