

புதுடெல்லி:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 12ம் வகுப்புக்கான பொருளாதாரம், 10ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. இதற்கிடையே, 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்தது.
இதையடுத்து, சிபிஎஸ்இ அமைப்பை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கும் சிபிஎஸ்இக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள பிரீத் விஹார் பகுதியிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக ஆசிரியர்கள் உள்பட 3 பேரை டெல்லியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள்தான் சிபிஎஸ்இ வினாத்தாளை லீக் செய்துள்ளனர். காலை 9.15 மணிக்கு சிபிஎஸ்இ வினாத்தாளை 2 ஆசிரியர்களும் போட்டோ எடுத்துள்ளனர்; வினாத்தாளை போட்டோ எடுத்து பயிற்சி மைய உரிமையாளருக்கு 2 பேரும் அனுப்பியுள்ளனர். அதன்பின்னரே அவர் மாணவர்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர். #CBSE #CBSEPaperLeak #Tamilnews