விளைநிலங்களில் கரடி நடமாட்டம் - நேரில் பார்த்ததால் பொதுமக்கள் அச்சம்

களக்காடு அருகே இன்று விளைநிலங்களில் கரடி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததால் அச்சமடைந்துள்ளனர்.
கரடியின் கால் தடம் பதிவாகி உள்ளதை படத்தில் காணலாம்
கரடியின் கால் தடம் பதிவாகி உள்ளதை படத்தில் காணலாம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளை நிலங்களில் கரடி சுற்றி வந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீண்ட நேரம் கரடிகள் அந்த பகுதியில் உலா வந்தன. அதன் கால்தடங்கள் விளைநிலங்களில் பதிந்துள்ளது. அதன்பின் விவசாயிகளின் சத்தத்தால் கரடிகள் அங்கிருந்து வெளியேறின. இந்த கரடிகள் அங்குள்ள மலையில் உள்ள புதர்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இரவில் உணவுக்காக ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனசரகர் புகழேந்தி மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

ஆனால் அதற்குள் கரடி புதர்களுக்குள் சென்று பதுங்கி கொண்டன. கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளிகுளம் பகுதியில் கரடி நடமாட்டம் காணப்பட்டது. அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதையடுத்து கள்ளிகுளத்தில் சுற்றி வந்த கரடி இடம்பெயர்ந்து சிங்கி குளத்திற்கு சென்றதா? அல்லது சிங்கிகுளத்தில் சுற்றுவது வேறு கரடியா என்று வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com