

பெங்களூர்:
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்.கள் 44 பேர் பெங்களூருவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
பாரதிய ஜனதாவுக்கு செல்வதை தடுக்க இவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முதல் 7-ந் தேதி வரை மைசூரு, பெங்களூரு, மடிகேரி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தது.
ஆனால் சுற்றுலா செல்ல காங்கிரஸ் மேலிடம் தடை விதித்து விட்டது. சுற்றுலா செல்லும் இடத்தில் எம்.எல்.ஏ.க்கள் தப்பிவிடாமல் இருக்கவும், அவர்களை பாரதிய ஜனதா கட்சியினர் கடத்திச் சென்று விடக்கூடாது என்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் டெல்லி மேல்-சபை தேர்தலில் முதல் முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலை அறிந்த சொகுசு விடுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மோத்வாதியா கூறியதாவது:-
நோட்டாவிற்கு வாக்கு அளிக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களில் சிலர் பாரதிய ஜனதாவுக்கு வாக்கு அளிக்கும் மனநிலையில் உள்ளனர். சிலர் 2 கட்சிக்கும் வாக்கு அளிக்க வேண்டாம் என்ற நிலையிலும் உள்ளனர்.
இதனால் தான் நோட்டா முறை குஜராத்தில் அமல் படுத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
எம்.பி. தேர்தலில் போட்டியிடும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல் வெற்றியை தடுக்க பலவழிகளில் பாரதிய ஜனதா முயன்று வருவதாகவும் இதற்கான மறைமுக வேலைகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருவதாகவும் சொகுசு விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ. ஒருவர் கூறினார்.
அகமதுபடேலை எதிர்த்து காங்கிரசில் இருந்து விலகிய பல்வந்த்சிங்ராஜ்புத் என்பவரை பாரதிய ஜனதா குஜராத்தில் டெல்லி மேல்-சபை எம்.பி. வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
ஏற்கனவே பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காலியாக உள்ள 3 எம்.பி. பதவிகளுக்கு 4 பேர் போட்டியிடுவதால் குஜராத் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.