கோவையில் ரெயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் உடல் கருகி பலி

கோவையில் இன்று அதிகாலை ரெயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவையில் ரெயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் உடல் கருகி பலி
Published on

கோவை:

நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் சசிதரன். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 18). இவர் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ஸ்ரீஹரி பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அறையில் இருந்த ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக வெளியே வந்தார். பீளமேடு ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்த இவர்கள் அங்கு பெட்ரோல், டீசல் கொண்டு வரும் ரெயில் நிற்பதை பார்த்தனர்.

அப்போது ஸ்ரீஹரி விளையாட்டாக உயர் மின் அழுத்த வயரில் என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று கூறி அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் மீது ஏறினார்.

இதனை அங்கு இருந்த அவரது நண்பர்கள் வேண்டாம் என்று தடுத்தனர். எதையும் காதில் வாங்கி கொள்ளாத ஸ்ரீஹரி வேகமாக ரெயில் மீது ஏறி அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின்சார வயரை தொட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவஇடத்திலேயே ஸ்ரீஹரி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு உடல் கருகி இறந்து கிடந்த ஸ்ரீஹரியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பீளமேடு ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com