மயக்கம் ஏற்பட காரணம் என்ன ? மயக்கம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..!
மூளைக்கு தேவையான ரத்தம் செல்ல முடியாமல் தடைபடுவதுதான் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணம்.
ஏதேனும் சில காரணங்களால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்கு கீழே நின்று விடும். இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுகிறது.
மயக்கம் வந்தால்....
தலை சுழல்வது அதாவது தலைச்சுற்றல் போன்று உணர்வது மயக்கத்தின் முதன்மை அறியாகும். அப்படி திடீரென மயக்கம் வந்தால் மெதுவாக உட்காருவதற்கு முயற்சி செய்யுங்கள்.
உட்கார்ந்தவுடன் தலையை முழங்கால்களுக்கு இடையில் வைக்கவும். அப்படி அமர்வது மூளைக்கு ரத்தம் செல்ல உதவும்.
ஒருவேளை மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தால் உடனே எழுந்திருக்க முயற்சிக்காதீர்கள். சில நிமிடங்கள் அப்படியே இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஒருவர் மயக்கம் அடைந்தால்..
பொது இடங்களில் யாரேனும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தால் உடனே எழுப்பாதீர்கள், அவரை அப்படியே படுக்க வையுங்கள்.
பின்னர் அவரது உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு உள்ளதா என்று பாருங்கள்.
அவரின் கால்களை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்துவதன் மூலம் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவி செய்யலாம்.
அவரை சுற்றி அதிகம் பேர் கூடி இருந்தால் அவர்களை அப்புறப்படுத்தி அங்கு போதுமான காற்றோட்ட சூழல் இருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
அந்த நபர் சிறிது சுய நினைவிற்கு வந்த பிறகு உடனே எழுப்பி நிற்க விடாதீர்கள்.
ஒரு டம்ளர் தண்ணீர் வழங்குங்கள். ஒரு நிமிடத்திற்கு மேல் மயக்க நிலையிலேயே இருந்தால் அவசர மருத்துவ உதவியை நாடவும்.
மயக்கம் வராமல் தடுக்க..
நீரிழப்பு மயக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் மயக்கம் ஏற்படலாம். சீரான இடைவெளியில் உணவினை சாப்பிடுவது அவசியம்.
அதிக மன அழுத்தம் மயக்கத்திற்கு வழிவகுக்கும். தியானம் மற்றும் யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.
மயக்கம் ஏற்படுவதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நன்று.