குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்யலாம்?
குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். சரி பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியம். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டும். அல்லது பெற்றோர் தாம் படித்த கதையை கூற வேண்டும்.
குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயல வேண்டும். இப்படிச் செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்தகங்கள் மீது ஆர்வம் பிறக்கும்.
குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். அதை தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் பெற்றோர், புத்தகம், நாளிதழ் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசிக்க வேண்டும்.
தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.
குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும் புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.
புத்தகத்தில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டுவது பெற்றோருக்கு அயர்வை ஏற்ப ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தை அதை விரும்பிக் கேட்க வாய்ப்பு உள்ளது.
எப்படி ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதைப் போலத்தான் இதுவும் குழந்தைகள் கதையிலோ, படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள்.