பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது என்று தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும், பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும். பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.