உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நமது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கைப் போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்க, போருக்காக ஒரு வீரனை ஆயத்தப்படுத்துவதை போல தாய் தந்தையர் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்கள்.
ஒரு குழந்தை இந்தச் சமூகத்தை சந்திப்பதற்கு முன்னரே பெற்றோரைத்தான் சந்திக்கிறது. அவர்களுடன் ஒன்றி உறவாடுகிறது. அக்குழந்தையைப் பெற்றோரே பேணி காத்து சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
உடலில் பலமும், மனதில் திடமும் இல்லாதப் பெற்றோரை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்?
பெற்றோரின் தேவைகளை கண்டறியுங்கள்:
குழந்தைகள் சற்று வளர்ந்து தங்களது வாழ்க்கையைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் திறன் பெற்ற பிறகு அவர்களிடம் தங்களது தேவைகள் குறித்து கூறுவதற்கு பெற்றோர்கள் பெரிதும் சங்கடப்படுகின்றனர்.
பெற்றோர்களின் தேவையை நாமே கண்டறிவது அல்லது கேட்டறிவதன் மூலம், அவர்கள் பிரச்னை குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பத்தினர் தரவேண்டிய ஆதரவு, வீட்டில் பாதுகாப்பு, மருத்துவத் தேவைகள், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், சமூகத்தோடு தொடர்பு இது போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்.
உரையாடுங்கள்:
நீங்கள் எவ்வளவு பரபரப்பாக இயங்கி வந்தாலும், உங்கள் பெற்றோருக்கான நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். அவர்களிடம் தினசரி உரையாடுங்கள். அவர்களுக்காக நீங்கள் ஒதுக்கும் நேரமே அவர்களது முக்கியத் தேவையாக இருக்கும்.
உங்களுடைய பெற்றோரில் ஒருவர் தனது இணையை இழந்துவிட்ட நிலையில், நீங்கள் அவர்களை இன்னும் கருத்தாய் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எந்தவிதமான மனச்சோர்வு இருப்பினும் நீங்கள் அவர்களுக்காக ஒதுக்கும் நேரம் அவர்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.
மற்றவர்களுடன் உறவாட வழிவகை செய்யுங்கள்:
நீங்கள் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பட்சத்தில், வயதானவர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு உங்கள் பெற்றோர்களைக் கூட்டிச் செல்லுங்கள்.
இதனால் அவர்களுக்கு மற்றவர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும். பிறருடனான சமூகஉறவு பலப்படும் போது உங்கள் பெற்றோருக்கு பாதுகாப்பின்மை உணர்வு குறையும்.
பெற்றோரை வெளியே கூட்டிச் செல்லுங்கள்:
வயது மூப்பு, ஆரோக்கியம் குறைவு காரணமாக பெற்றோரை நான்கு சுவர்களுக்குள் அடக்கிவைக்க நினைப்பது மிகப்பெரும் குற்றம். அவர்களுக்கான உளவியல் தேவைகளை, பிரச்னைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்களை வெளிக்காற்றை சுவாசிக்க வைப்பதன் மூலம், மற்ற மனிதர்களை சந்திக்க வைப்பதன் மூலம், அவர்களுக்குள் உண்டாகும் தனிமையை நம்மால் தகர்க்க முடியும்.
அவர்களுக்கு பிடித்தமான, வசதியான இடங்களுக்கு அவர்களை கூட்டிச்செல்லுங்கள். அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர வையுங்கள். இதை தவிர அவர்கள் உங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு மிகவும் குறைவு தான்.