இன்று உலக இதய தினம்... இதய நோய்களை தவிர்க்கும் வழிமுறைகள்
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே அனைவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இதயநோய் வராமலும், வந்து சிகிச்சை பெறுபவர்களும் இதய நலனை பாதுகாக்க சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நல்லது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீரான உடல் எடை பராமரிப்பு, முறையான உணவுப் பழக்கம், அன்றாட உடற்பயிற்சிகள், மதுப்பழக்கம் தவிர்த்தல், புகைப் பழக்கம் தவிர்த்தல், மன அழுத்தமில்லா வாழ்க்கை ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
உடலின் சீரான எடையை பராமரிப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் ஆகியவை அவசியம். அதிகமான உடல் எடை காரணமாக கூட இதயம் பாதிப்பு ஏற்படலாம்.
அதிகக் கலோரி நிறைந்த உணவு, அதிக உப்பு, சர்க்கரை முதலியன இதய இரத்த நாள நோய்களைத் தூண்டக் கூடியவை.
இறைச்சி, வெண்ணெய், பாலாடை, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், வனஸ்பதி போன்ற தாவர எண்ணெய் வகைகளில் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது. அது, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
அதிகமாக இனிப்பு சாப்பிடுவது இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடித்து விட வழிவகுக்கிறது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கிறது. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகின்றன.
பாஸ்ட் புட் வகைகளில் அதிகப்படியான கொழுப்பும், உப்பும் இருப்பதால் தான் உடலுக்கு தேவையான கலோரி மிக அதிகமாக கிடைத்து இதய நோய்களை உருவாக்குகிறது.
மேலும் நார்ச்சத்து பெரிதாக இருப்பதில்லை இதுவே ஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உட்கொள்வது ரத்தத்தில் கொலஸ்ட்ரால், கொழுப்பு அளவு அதிகரிக்காமலும், இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது.
இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.