தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...
பேச்சுவார்த்தை இல்லாமை
தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது.
தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.
மன அழுத்தம், அவசரம்
வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம்.
மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
அலுப்பூட்டும் 'வழக்கம்'
திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
கவனிக்கப்படாதது
திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும்.
ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.