சினிமாவில், சூப்பர் ஹீரோ... அரசியலில், அசைக்க முடியாத சக்தி... இரண்டிலுமே அவர் ஆதிக்கம் செலுத்தினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த்.
சிறு வயது முதலே அவருக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால் படிப்பின் மீது நாட்டம் குறையவே 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
தனது நண்பர்கள் அளித்த உற்சாகத்தாலும், சினிமா மீது தனக்கு இருந்த மோகத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து 1978-ம் ஆண்டு புறப்பட்டு சென்னைக்கு வந்தார்.
பல அவமானங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் மத்தியில், 1979-ம் ஆண்டு `இனிக்கும் இளமை' என்ற படத்தில் டைரக்டர் எம்.ஏ.கஜா, விஜயராஜை நடிகராக அறிமுகப்படுத்தியதுடன் அவருக்கு விஜயகாந்த் என்ற பெயரையும் சூட்டினார்.
அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், நினைவே ஒரு சங்கீதம், உழவன் மகன், செந்தூரப்பூவே, சின்னக்கவுண்டர், புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், வல்லரசு, ரமணா என ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
1999-ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் நடிகர்களுக்கு பலவித சேவைகளையும் செய்யத் தொடங்கினார். மேலும் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகபடுத்தினார்.
2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து 'நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை' என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.
திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
2005-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, ``தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் அரசியல் கட்சியை தொடங்கினார்.
தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.
1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர்.காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி.
தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினி பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என ஏராளமானோருக்கு உதவி செய்து வந்தார்.
தான் உழைத்து சம்பாதித்த பணத்தை நாட்டு மக்களுக்கு கொடுத்தார். அதேபோல் அவர் தனது நண்பர்களையும் கடைசி வரை கைவிடவில்லை. தன்னுடனேயே வைத்திருந்து தன்னோடு சேர்ந்து அவர்களையும் முன்னேற்றினார்.