குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கமாக இருக்கிறது.
ஆனால், குளியல் என்றாலே சிலருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது. ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது.
இந்த நிலைக்கு அக்வாஜெனிக் புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நேரம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.
இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று மட்டும் சொல்லப்படுகிறது.
ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம். மேலும், மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம்.
சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட்டதும், 'மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே வந்து அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.