தம்பதியருக்கிடையே விரிசலை உருவாக்கும் சில தவறுகள்..
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம்.
எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும்.
ஆனால் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட சில மணித்துளிகளே போதுமானதாகிவிடும். இதுகுறித்து உளவியல் ரீதியான விஷயங்களை பார்ப்போம்.
அன்பு
திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது. அவரிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை கடந்து உறவு நிலைத்திருக்க துணையின் மீது மரியாதை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
சண்டை
தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டால் அதுபற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கூறி ஆலோசனை கேட்பது நல்லதல்ல.
ஆரம்பத்தில் அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாகவோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவோ தோன்றினாலும் அது நிரந்தர தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது.
தம்பதியர் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது துணை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும்.
உளவியலாளர்களின் கருத்துபடி, தம்பதியருக்கிடையே மோதல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும்.
மூன்றாம் நபரிடம் பகிரும்போது துணை பற்றி பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே அவர்களின் மனதில் பதியும்.
அல்லது ஒருதலைபட்சமாக இருவரில் யாராவது ஒருவருக்கு அவர்கள் ஆதரவு கரம் நீட்டலாம். அது தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும்.
எனவே ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சண்டை இருப்பினும் அதை யாரிடமும் பகிராமல் இருவரும் சரிசெய்து வாழும் போது வாழ்க்கை அழகாக இருக்கும்.