அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியை புறக்கணித்தது முதல் சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனியே சந்தித்ததுவரை பேசுபொருளானது.
இந்நிலையில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அதிமுகவினர் கோரியிருந்தனர்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி முதலில் குரல் வாக்கெடுப்பு தான் எடுக்க வேண்டும் என கூறியதை அடுத்து அதிமுகவினர் அவையில் எழுந்து நின்று கூச்சலிட்டு உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 2 முறை குரல் வாக்கெடுப்பு அதன்பிறகுதான் டிவிஷன் முறை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் செங்கோட்டையன் முரணோடு இருக்கிறார்,சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் அவை நடைமுறை பற்றி அதிமுகவினருக்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையனின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.