இறைச்சி உணவு உடலுக்கு உகந்ததா, இல்லையா? என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன.
சமீபத்திய ஆய்வுகளில், மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், இறைச்சியை தவிர்க்காமல் அளவோடு உட்கொள்வது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, B.12 போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் செழுமையான அளவில் உள்ளன.
இறைச்சியில் காணப்படும் இரும்பு வகையான ஹீம் அயன் என்னும் இரும்புச்சத்து, மனித உடலில் பிராண வாயுவை கொண்டு செல்ல, ஆக்சிஜன் போக்குவரத்து மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதது.
இந்த 'ஹீம்' இரும்பு உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. பொதுவாக, இந்த ஹீம் இரும்புச்சத்து குறைபாட்டால் தான் ரத்தசோகை நோய் பலரையும் பாதித்துள்ளது.
பெண்கள் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்பால் பல்வேறு உடல் நலக்குறைவுகளை எதிர்கொள்கின்றனர். ரத்தசோகை பாதிப்பை தடுக்க ஈரல் இறைச்சி மிகச் சிறந்த உணவாக உள்ளது.
சிவப்பு இறைச்சியில் உள்ள வைட்டமின் B 12, ரத்தம் மற்றும் டி.என்.ஏ. என்னும் மரபணு தகவல்களை கடத்தும் மூலக்கூறு உருவாகவும் முக்கிய சத்தாக இருக்கிறது.
உடலை இயங்க செய்யும் பல்வேறு ஹார்மோன்கள், நொதிகள் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சில விலங்குகளின் சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.
இது எல்.டி.எல். எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு, கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இதனை தவிர்க்க, சிவப்பு இறைச்சியை சிறிய அளவில், வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே உண்ணலாம்,
ஏற்கனவே இதய நோய் அல்லது உடலில் அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் இறைச்சிகளை சாப்பிட விரும்பினால் குறைவாக உண்ண வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.