உடல் பருமனுக்கான காரணமும் அதை இயற்கை முறையில் குறைப்பதற்கான வழிகளும்.
உடல்பருமனுக்கான காரணம்:
நொறுக்குத் தீனி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, புகை-மதுப்பழக்கம், குறைந்த உடலுழைப்பு,
உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம் ஆகும். இதுதவிர சில உடல் குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன.
ஹார்மோன் குறைபாடுகள்,தைராய்டு நோய் உள்ளவர்கள் மற்றும் பெண்களுக்கு புரோலாக்டின், புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களில் உள்ள குறைபாடுகளால் இயல்பாகவே உடல்பருமன் அதிகமாக இருக்கும்
மனச்சோர்வுகள், தூக்கமின்மை இவைகளுக்காக எடுக்கப்படும் மருந்துகள் மற்றும் பரம்பரையும் சில காரணங்களாகும்.
உடல்பருமனால் டைப் 2 சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், கால்களில் வரும் நாள வீக்கங்கள், தூங்கும் போது குறட்டை விடல்,
திடீரென்று மூச்சு நின்றுவிடுவது போலிருத்தல், ஆண், பெண் இருபாலருக்கும் இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
தீர்வுகள்:
மனதில் நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மற்றும் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
தேயிலையுடன் லவங்கப்பட்டை சேர்த்து குடிக்க வேண்டும். பூனை மீசையிலை (ஜாவா டீ) என்ற டீ காலை, மாலை என இருவேளை குடித்து வரலாம். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
தோல், விதை நீக்கிய வெண்பூசணி சாறு காலையில் 60 மில்லி வீதம் குடிக்கலாம்.
மடல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச்சாறு எடுத்து அதை ஏழுமுறை தண்ணீரில் கழுவி அதனுடன் இஞ்சி, சிறிதளவு பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மோரில் கலக்கி குடிக்கலாம்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நத்தைச்சூரி விதையை வாங்கி, இளவறுப்பாக வறுத்து பொடி செய்து காப்பி போல போட்டுக் குடிக்கவும்.
சிறிதளவு கொள்ளுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.
இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, எலுமிச்சை சாறு, புதினாச்சாறு 2.5 மி.வீதம் எடுத்து தேன் 5 மில்லி கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்).
எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.