முடவாட்டுக்கால் கிழங்கு செடிகள் தமிழகத்தில் பெரும்பாலும் கொல்லிமலை, சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன.
இந்த செடிகள் ஈரபதம் உள்ள நிலங்கள், பாறைக்கட்டுகள், மரங்களில் பற்றிப்படர்ந்து வளரும் பெரணி வகை செடிகளாகும்.
இதன் கிழங்கு ரோமங்கள் அடர்ந்த ஆடுகளின் கால் போல் இருப்பதால் இதனை ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் என்று கூறுகின்றனர்.
இந்த கிழங்கில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் கூறுகிறது.
எலும்பு மற்றும் மூட்டு வலி, முடக்குவாதம், எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு இது மருந்தாக அமைகிறது.மேலும் ஒரே இடத்தில் முடங்கியவர்களை எழுந்து நடக்க வைக்கும் அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வகை கிழங்குகள் இரும்பு, கால்சியம், செம்பு, தங்கம், மற்றும் சிலிக்கா போன்ற கனிமச்சத்துக்களை பாறைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
முடவாட்டுக்காலை ஆட்டுக்கால் சூப் செய்வது போன்று சூப் சமைத்து பருகலாம். மேலும் இதனை உலர வைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம்.
இது செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
அதே வேளையில் முடவாட்டுக்கால் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஒவ்வாமை, தோலில் அரிப்பு, வீக்கம், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். எனவே இதனை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயன்படுத்துவது நல்லது.