கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்துவம் கொண்ட மூலிகை. இது ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
கற்பூரம் மற்றும் ஓம நறுமணம் உள்ள இந்தச் செடியின் இலைகள் நீர்ச்சத்து நிறைந்து தடித்து இருக்கும்.
இதன் இலைகளில் உள்ள கார்வாக்ரால், தைமால் மற்றும் பீட்டா காரோபைலின் போன்ற வேதியியல் பொருட்கள், இலைகளின் நறுமணம் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.
காசம், இருமல், கபநோய்கள், தலைப்பாரம், சுரம், குத்திருமல், வாதநோய்கள், மார்பில் சேரும் கப நோய்கள் கற்பூரவல்லியால் தீரும் என பதாத்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது சளி, இருமல், தலைப்பாரம் போன்ற கபநோய்களுக்குச் சிறந்த மருத்தாகிறது. குளிர், பனிக் காலங்களில் தோன்றும் தொடர் தும்மல், இரைப்பு மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு கற்பூரவல்லி இலையின் சாறு சிறந்த மருந்து.
தோலில் உண்டாகும் ஒவ்வாமை, தோலில் ஏற்படும் கானாக்கடி போன்ற தடிப்புக்கும் இதன் இலையை தோலில் தேய்க்கலாம்.
கற்பூரவல்லி சருமத்துக்கு நல்ல மருந்து. இது வியர்வையை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது. சுரம் தோன்றும் சமயம் 50 மி.லி. சாறு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றுவலி மற்றும் அஜீரணத்துக்கு கற்பூரவல்லி இலைச்சாறு 50 மி.லி. அல்லது 10 கற்பூரவல்லி இலையை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்துப் பருகலாம்.
கற்பூரவல்லி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருக, மாதவிடாய் சமயம் தோன்றும் வயிற்றுவலிக்கும், சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் காரணமாக உண்டாகும் வலிக்கும் சிறந்த மருந்தாக அமையும்.