மீன் பாத்திரத்தில் மீன் வாசம் இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாசம் போய்விடும்.
ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை தோசை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்.
வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.
பன்னீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி பிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
முந்திரி, பாதாம், கசகசா போன்றவைகளை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.
அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.
அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை நீர் கொதித்து வெளியே வழியாது.