காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தண்ணீரை வழங்குகின்றன.
அவை குழந்தைகளை பிற்காலத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
ஆனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி?
உணவு விஷயத்தில் உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்கிறது, எனவே குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.
குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.
குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும்.
புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு. காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.
உங்கள் குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.
காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.