காலையில் காபி குடித்தால் மரணத்தை தள்ளிப்போடலாம்- ஆய்வில் புதிய தகவல்
தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .
காபி நுகர்வுக்கும் இறப்பு ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு, பானத்தில் சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து இது மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பதால் இறப்புக்கான ஆபத்து 14 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு, 1999-ம் ஆண்டு முதல் முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாகவும், தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.
3 கப்களுக்கு மேல் குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காபி குடிப்பதற்கும் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.