உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை.பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க விரும்புவார்கள்.
புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். அவை வழங்கும் நன்மைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும்.
பிஸ்தா
இது பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். இதில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் பாலிபீனாலிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
நீரிழிவு நோயை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் , உடல் எடையைக் குறைக்க உதவும்.
முந்திரி
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைய உள்ளன. சிறுநீரக வடிவிலான இந்த உலர் பழம் உடல் எடையைக் குறைக்கும்.
இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
அத்தி
இதில் கால்சியம், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து போன்றவை நிறைய உள்ளன.
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும்.
பாதாம்
இது உலர் பழங்களிலேயே முதன்மையானது, பிரபலமானது. இதில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ஏற்றது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும், உடல் எடையை சீராக நிர்வகிக்க துணை புரியும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பேரீட்சை
உலர் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த உலர் பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது.
உடல் எடையைக் குறைக்க உதவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் ஆற்றல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.