சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று.
அப்படிப்பட்ட பொருட்களில் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.
குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும்.
அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும்.
குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.
மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும்.
இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும்.
வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.
குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு.
சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.