கறிவேப்பிலை நம் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளரக் கூடிய செடி. இது சிறுமரமாக வளரும். நம் உணவில் தாளிப்பதற்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையை அலட்சியமாக ஒதுக்குபவர்களே அதிகம்.
ஆனால் இதில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. பல நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. சித்த மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உணவின் மீது உண்டாகும் விருப்பமின்மை, ருசியின்மை, வயிற்றுவலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, அனைத்து விதமான பித்தநோய்கள், நீடித்த சுரம் போன்றவை கறிவேப்பிலை பயன்படுத்துவதால் குணமாகும்.
கறிவேப்பிலை சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. கணையத்தில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் கால் எரிச்சல், மரத்துப் போவது, கால் பகுதிகளில் உண்டாகும் ரத்தக் குழாய்கள் சுருக்கம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து கறிவேப்பிலை.
கறிவேப்பிலையில் உள்ள ரூட்டின் என்ற நறுமணமிக்க வேதிப் பொருள் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களை நன்கு செயல் படத் தூண்டுகிறது, ரத்தக் குழாய்களை நன்கு விரிவடையச் செய்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினம் 5 கிராம் அளவு கறிவேப்பிலைப் பொடியை காலை-மாலை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
நரம்பு மண்டலப் பாதிப்பால் ஏற்படும் அல்சைமர் நோய்கள், டிமென்சியா எனப்படும் மூளைச்செல்கள் பாதிப்பால் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றுக்கும், புற்றுநோய்களுக்கும் கறிவேப்பிலை நல்ல பலன் அளிக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், சிறுநீரகத்தில் அதிகமான யூரியா, யூரிக் ஆசிட் மற்றும் கிரியேட்டனின் அளவுகளையும் கறிவேப்பிலை குறைக்க உதவுகிறது. கல்லீரல் நன்கு செயல்படச் செய்கிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகளான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது.
தலைமுடி உதிர்தல் மற்றும் இளநரைக்கு கறிவேப்பிலையை உணவில் தவறாது சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தல் தைலங்களில் கறிவேப்பிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.