கரப்பான் வறட்சி தோல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்
கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. இது பெரும்பாலும் 2 கால் பாதத்தின் மேல் பகுதிகளிலும், தொடை இடுக்குகளிலும் தான் அதிகமாக வருவதுண்டு.
கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம்.
இந்தத் தோல் நோய் வந்த இடத்தில், முதலில் தோல் காய்ந்து போகும். பின் அரிப்பு எடுக்கும். நாம் நன்றாக சொரிந்து வைப்போம்.
பின் அந்த இடம் சிவந்து போகும். சில நேரங்களில் அந்த இடத்தில் கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு நீர் கூட வடிவதுண்டு. இந்த அரிப்பு எடுத்த இடங்களெல்லாம் திட்டு திட்டாக வீங்கிவிடும்.
நமது உடலுக்கு எரிச்சலூட்டும் அல்லது ஒத்துக்கொள்ளாமையை ஏற்படுத்தும் பொருட்களை நாம் தொடும்போது, தோலில் படும்போது, இந்த தோல் அலர்ஜி நோய் (எக்சிமாவின்) அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
இந்த எக்சிமா வரும், போகும். நன்கு குணமடைந்து விட்டது என்று நினைப்போம். ஆனால் கரப்பான் நோய் நிறைய பேருக்கு நீண்ட காலத்துக்கு இருக்கும். இதை 'கிரானிக் எக்சிமா' (நாள்பட்ட தோல் அரிப்பு நோய்) என்பார்கள்.
மிக அரிதாக, குடும்பத்தில் யாருக்காவது தோல் அலர்ஜி நோய் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புண்டு. செல்லப்பிராணிகளின் முடி, ஆஸ்துமா, சில உணவுப் பொருட்கள் முதலியன இந்த நோயை உண்டு பண்ணலாம்.
சிகரெட் புகை, காற்றிலுள்ள மாசுப்பொருட்கள், கம்பளித் துணிகள், சில சரும நிவாரணிகள், கிரீம்கள், சில துணி வகைகள் இவைகள் சூழ்நிலையோடு சேர்ந்து நோயை உண்டாக்கும்.
மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, மனத் தளர்ச்சி போன்றவை அதிகமாக இருந்தால் கூட இந்தத் தோல் அலர்ஜி நோய் வர அதிக வாய்ப்புண்டு.
இந்த நோய் வந்தவர்கள், தோலை உலர்ந்து போகவிடக்கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது சோற்றுக்கற்றாழை கிரீம்கள் தடவி, வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிரந்தர தீர்வுக்கு சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.