பொதுவாக இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பானமாக கருதப்படுகிறது. அதுவும் இளநீரை கோடைக்காலத்தில் குடித்தால், உடல் சூடு குறைவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.
இதற்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை தான் காரணம்.
இவை உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் தருவதோடு, வேறு பல நன்மைகளையும் வழங்குகின்றன. இப்படிப்பட்ட இளநீரை ஒருவர் கோடையில் தினமும் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
பெரும்பாலான மக்கள் போதுமான அளவு பொட்டாசியத்தைப் பெறுவதில்லை. இந்த பொட்டாசியம் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவுகிறது. மேலும் இளநீர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இளநீரை அடிக்கடி வாங்கி குடித்து வருவது நல்லது.
எடை குறைவுக்கு உதவுகிறது
மற்ற பழச்சாறுகளில் சர்க்கரை, கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இளநீரில் கலோரிகள் குறைவு மற்றும் இதில் இயற்கை சர்க்கரை இருப்பதால், பழச்சாறுகளுக்கு சிறந்த மாற்றாகும்.
இளநீரில் 94 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் இந்த பானத்தை தேர்ந்தெடுத்து குடிப்பது நல்லது.
சிறுநீரக கல்லை தடுக்கும்
தற்போது சிறுநீரக கல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிறுநீரக கல்லை தடுக்க வேண்டுமானால், உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு நீரை அதிகம் குடிப்பது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மற்றும் பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் சிறுநீரக கல் பிரச்சனையைக் கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக கல் வரக்கூடாதெனில், இளநீரைக் குடித்து வருவது நல்லது.
இளநீருடன் எந்த பொருட்களை கலந்து குடிக்கலாம்?
எலுமிச்சையை இளநீருடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பது நல்லது. இவ்விரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளன. இது உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் வைத்திருக்க உதவும். மேலும் இப்படி இளநீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.
சப்ஜா விதைகள்
இளநீரில் கலந்து குடிக்க ஏற்ற மற்றொரு பொருள் என்றால் அது சப்ஜா விதைகள். இந்த சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, இளநீரில் கலந்து குடிக்கும் போது, செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமானம் சீராக நடைபெறும். இது தவிர, சப்ஜா விதைகள் உடல் சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்
சோம்பு
இளநீருடன் சோம்பு விதையை ஊற வைத்து உட்கொள்வது மிகவும் நல்லது. இப்படி கோடைக்காலத்தில் குடிக்கும் போது, அது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். அதோடு செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.