பூமியில் உள்ள நீர், ஆவியாகி வளிமண்டலத்துக்குச் செல்கிறது. அதன்பின் நீராவி குளிர்வடைந்து நீர்த்துளிகளாக மாறுகிறது.
நீர்த்துளிகள் ஒன்று கூடி மேகங்களை உருவாக்குகின்றன. மேகங்கள் மேலும் குளிர்வடையும்போது, அவை நீர்த்துளிகளாக விழுகின்றன.
மழைத்துளிகளைப் பார்த்து ரசிக்கும் நாம், அதில் பல்வேறு வடிவங்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப்பற்றி காணலாம் வாருங்கள்!
மழை
நீர்த்துளிகள் புவியில் விழும் பொதுவான வடிவம் மழைப்பொழிவு எனப்படுகிறது. நீர்த் துளிகள் 0.5 மி.மீ. விட்டத்திற்கு அதிகமாக இருந்தால் அதனை மழைப்பொழிவு என்கிறோம்.
இதுவே 0.5 மி.மீ.க்கு குறைவாக இருந்தால் தூறல் என்று அழைக்கப்படுகிறது.
ஆலங்கட்டி மழை
மழைப்பொழிவானது 5 மி.மீ. விட்டத்தை வி்ட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளைக் கொண்டிருந்தால் அது ஆலங்கட்டி மழை எனப்படுகிறது.
இது இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது. மேகத்தின் குளிர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய பனிக்கட்டியாக இவை உருவாகிறது.
கல் மழை
நீர்த்துளிகளும், 5 மி.மீ. விட்டத்திற்குமேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல் மழை என்று பெயர். சில நேரங்களில் வளிமண்டல வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும் பொழுது நீர் உறைநிலைக்குச் சென்றுவிடுகிறது.
அது புவியை நோக்கி வரும்பொழுது பனிக்கட்டிகளாக மாறுகிறது. ஆகவே பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து புவியின் மீது கல் மழையாக பொழிகிறது.
உறைபனி மழை
மழைத்துளிகள், சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்றுவழியாக விழும்போது உறைவதில்லை.
மாறாக குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்பொழுது அவை உறைந்த நிலைக்கு சென்று விடுகின்றன. இவைவே உறைபனி எனப்படுகிறது. இதன் விட்டம் 0.5 மி.மீ.-ஐ வி்ட அதிகமாக இருக்கும்.
பனிப்பொழிவு
மேகத்தில் உள்ள வெப்பம் குறைவதன் காரணமாக நீராவி நேரடியாக பனிக்கட்டியாக மாற்றப்படுகிறது. இதன் பொழிவையே பனிப்பொழிவு என்கிறோம்.
இவை துருவப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் அதிகமாக உருவாகின்றன.