வீட்டு உபயோக சாதனங்களை வாங்க திட்டமிடுகிறீர்களா..? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது எல்லாமே டிஜிட்டல் மயம்தான். 'ஓகே கூகுள்', 'ஹே சிரி'... என குரல் வழி கட்டுப்பாட்டில் உலகமே இயங்க பழகிவிட்டது.
ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இப்போது வீட்டு உபயோக சாதனங்கள் கூட நவீனமாக அப்டேட் ஆகிவிட்டன.
ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? என அலசி ஆராய பழகிவிட்டனர்.
ஆம்..! நீங்களும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு, இருமுறை பரிசோதித்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அடுத்த 10 வருடங்களுக்கு, ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்தான் மின்சாதன பொருட்களை ஆட்சி செய்ய இருக்கின்றன.
ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்
'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' என்பதன் சுருக்கம்தான் ஐ.ஓ.டி. எளிமையாக சொல்வதென்றால், இணையதளத்துடன் இணையக்கூடிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்.
இவை சென்சார்கள், மென்பொருள்கள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை கொண்டு செயல்படுகின்றன.
வழக்கமான பிரிட்ஜுக்கும், ஐ.ஓ.டி. பிரிட்ஜுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஐ.ஓ.டி. பிரிட்ஜில் பொருத்தப்பட்ட சென்சார்கள் பிரிட்ஜை எந்நேரமும் கண்காணித்தபடியே இருக்கும்.
பிரிட்ஜ் பற்றிய தகவல்களை சேகரிக்கும், உங்களுக்கு ஸ்மார்ட்போன் ஆப் மூலமாக பகிர்ந்து கொள்ளும். ஆப் மூலமாகவே உங்களிடமிருந்து கட்டளைகளை பெற்று, பிரிட்ஜின் குளிர்ச்சியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும்.
நீங்கள் 500, ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தும்கூட இணையதளம் வாயிலாக இந்த கட்டுப்பாட்டு பணிகளை செய்யலாம். அதேபோல வீட்டில் இருக்கும்போது, குரல் வழி கட்டளைகள் மூலமாகவும் இதை இயக்கலாம்.