‘ஸ்னீக்கர்ஸ்’ வாங்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுகிட்டு போங்க...!
அளவு பொருத்தம்
ஸ்னீக்கர்கள் வாங்கும் போது முதலில் நீங்கள் பார்க்க வேண்டியது அது உங்களுக்கு கால்களில் சரியாகப் பொருந்துகிறதா என்பதுதான். முதன் முதலில் நீங்கள் ஸ்னீக்கர்கள் வாங்குகிறீர்கள் என்றால் நேரடியாக கடைக்குச் சென்று வாங்குங்கள்.
உங்களது பாத அளவு, பொருத்தம் போன்றவை தெரிந்த பிறகு ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்வது சிறந்தது. நேரடியாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது உங்களுக்கு அளவு பிரச்சினைகள் வரக்கூடும். மற்ற காலணிகளுடன் ஒப்பிடும்போது ஸ்போர்ட்ஸ் காலணிகள் அளவில் வேறுபடுகின்றன.
உங்களது கால் கட்டை விரல் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதித்து பார்க்க வேண்டும். கால் விரலின் நுனிக்கும் ஷூக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நடக்கும் போது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பிராண்டுக்கும் தனித்தனியான அளவீடுகள் உள்ளன. எனவே அதனையும் கவனத்தில் கொண்டு ஸ்னீக்கர்கள் வாங்க வேண்டும். முதல் முறை வாங்கும் போது கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
பாதுகாப்பு
நீங்கள் சாதாரண ஷூக்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் எது குறித்தும் கவலைப்பட தேவையில்லை. ஆனால் நீங்கள் ஒரு விளையாட்டுப் போட்டிக்கான ஸ்னீக்கர்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதில் கூடுதல் கவனம் தேவை. தசைப் பிடிப்புகள், மூட்டு வலிகள் போன்றவற்றை குறைப்பதற்கு இவை உதவுகின்றன.
உடற்பயிற்சியின்போது நீங்கள் ஸ்னீக்கர்களை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் விளையாடும்போது உங்களுக்கு அதிகப்படியான காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அவற்றை தடுப்பதற்கும் ஸ்னீக்கர்கள் உதவுகின்றன.
சாதாரண ஷூக்களை அணியும்போது நீங்கள் பெரும்பாலும் உடல் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஏதேனும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டியவை, ஸ்னீக்கர்கள்.
ஸ்னீக்கர் நிறம்
எல்லா ஆடைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்தால் அனைத்து ஆடைகளுக்கும் அதனை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
கருப்பு, நீலம், பிரவுன் போன்ற நிறங்களில் வாங்குவது அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும். இந்த நிறங்களில் உங்களிடம் ஸ்னீக்கர்கள் இருந்தால் அவை உங்கள் ஆடைகளுக்கு பொருந்துமா? இல்லையா? என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை.
மெட்டீரியல் தேர்வு
உங்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும், காற்றோட்டமானதாகவும் இருக்க வேண்டும், வசதியானதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நீங்கள் ஸ்னீக்கர்கள் வாங்க வேண்டும்.
பிராண்ட் மற்றும் ஸ்டைல் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதோடு அவற்றின் மெட்டீரியலையும் கருத்தில் கொண்டு ஸ்னீக்கர்கள் வாங்க வேண்டும்.
தோல் பொருட்களில் தயாரிக்கப்படும் ஸ்னீக்கர்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியவை. மேலும் அவை உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கும்.