வெண்ணெய்! ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதே வெண்ணெயை அன்றாடம் 10 கிராம் அளவுக்கு சேர்த்தாலே உயிருக்கு உலை வைத்துவிடும்.
2.21 லட்சம் பேரிடம் கடந்த 33 வருடங்களாக ஆராய்ச்சி செய்து உள்ளார்கள். அவர்களின் உணவு முறைகளில் வெண்ணெய் பயன்பாட்டை பகுத்து பார்த்ததில்தான் இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.
வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது.
இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது.10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதற்கு நேர்மாறாக சமையலுக்கும், உணவிலும் தாவர எண்ணைகளை பயன்படுத்தினால் இதய நோய்க்கான வாய்ப்பு 6 சதவீதம் குறைவதாக தெரிய வந்து உள்ளது.
ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், கனோலா போன்ற எண்ணெய், கடுகு எண்ணெய்யில் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
ரீபைன்டு சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் போது அதிக அளவு ஆல்டிஹைடுகளை அதாவது நச்சு கலவைகளை வெளியிடுகின்றன. இது உடலின் டி.என்.ஏ. மற்றும் செல்களை சேதப்படுத்தும். இதய நோய்களை ஏற்படுத்தும்.
பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம்.
நூடுல்ஸ், பாஸ்தா, கேக், பிரட் ஆம்லெட், பட்டர்நான், பன்னீர்பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் உள்பட சைவம், அசைவ உணவுகளில் 95% அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பசும் பாலை காய்ச்சி உறைய வைத்து கடைந்து எடுப்பது தானே வெண்ணெய்... அதிலும் இவ்வளவு ஆபத்தா? இதற்கு அரசு இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை கூறியதாவது:-
மில்க் புரோட்டீன் நல்லதுதான். ஆனால் அவ்வாறு சுத்தமாக கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்க முடியாது.
குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும். சுவையும் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்ணையில் சல்பர், விலங்கு கொழுப்புகள், மாக்ரைன் கலக்கிறார்கள்.
இது தான் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். சீஸ், மயோனைஸ் போன்ற உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக ஒரே எண்ணெயை நீண்ட நாள்கள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றார்.