குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள்
மோதல்
தம்பதியர் குழந்தைகள் முன்பாக கடுமையான வாக்குவாதங்கள் செய்வது, ஆக்ரோஷமாக சண்டையிடுவது குழந்தைகளை கவலையில் ஆழ்த்தும். தம்மை பாதுகாப்பற்றதாகவும் உணர வைக்கும்.
அவர்கள் வளரும்போது, ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அதனை சமாளிப்பதற்கான யுக்தியாக வாக்குவாதத்தையும், மோதல் போக்கையும் பின்தொடர வைக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
தவறான உடல் மொழியை வெளிப்படுத்துதல்
குழந்தைகள் முன்பு எதிர்மறையான சைகைகள் மற்றும் தவறான உடல் மொழிகளை வெளிப்படுத்துவதும் கூடாது. அதனை பார்த்து வளர்பவர்கள் நாளடைவில் அதனையே பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.
மற்றவர்கள் முன்னிலையில் நாகரிகமின்றி நடந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
தனி அறையில் தூங்குதல்
பெற்றோர் வாக்குவாதத்திலோ, சண்டையிலோ ஈடுபட்ட பிறகு வழக்கமாக தூங்கும் அறைக்கு செல்லாமல் இருவரும் பிரிந்து தனி அறையில் தூங்குவது குழந்தைகளிடத்தில் வெறுமையை ஏற்படுத்தும். பாதுகாப்பற்ற சூழலை உணர வைக்கும்.
பெற்றோருக்கிடையே பிரிவினை ஏற்பட்டுவிட்டது, இனி முன்பு போல் சகஜமாக பேச மாட்டார்கள், எதற்கெடுத்தாலும் நம் மீது எரிச்சலை வெளிப்படுத்துவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.
ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுதல்
குழந்தைகள் முன்பு புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்கள் எதிர்மறையாக அவர்களை பாதிக்கலாம். ஏனெனில் தந்தை செய்வதை தானே தாமும் செய்யப்போகிறோம் அது தவறில்லை என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.
உறவுகளை பற்றி பேசுதல்
குடும்ப உறவுகளின் நடத்தைகள், செயல்பாடுகள், சுபாவங்கள் பற்றி குழந்தைகள் முன்னிலையில் பேசக்கூடாது. ஏதேனும் ஒரு உறவை பற்றி விமர்சித்து பேசும் பட்சத்தில் அந்த உறவு மீது குழந்தைக்கு அதிருப்தி மேலிடும்.
அவரை நேரில் சந்திக்கும்போது இயல்பாக பேச முன்வர மாட்டார்கள். அவரை பற்றி தவறான அபிப்ராயமே குழந்தைகளிடத்தில் உருவாகும்.