குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள்
குறைத்து மதிப்பிடுதல்
தம்பதியர் ஒருவரையொருவர் சமமாக பாவிக்க வேண்டும். உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.
குழந்தைகள் முன்பு துணையை கடுமையாக விமர்சிப்பது, ஒருவரையொருவர் தரம் தாழ்த்தி பேசுவது, குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளை மனதளவில் பாதிக்க செய்துவிடும்.
ஒரு கட்டத்தில் உறவுக்குள் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை வளர்த்தெடுத்து விடும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவது தப்பில்லை என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வைத்துவிடும்.
விதிமுறைகளை புறக்கணித்தல்
ஒழுக்கத்தை பின்பற்றும் பழக்கத்திற்கு பெற்றோர்தான் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொள்வது அதன்படியே செயல்படுவது தவறில்லை என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைத்துவிடும்.
எப்போதும் விமர்சித்தல்
உங்கள் குழந்தைகள் செய்யும் எல்லா விஷயங்களையும் விமர்சிக்காதீர்கள். எதிர்மறையான கருத்துக்களை கூறாதீர்கள். அது அவர்களின் சுய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும்.
தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்கும். அதன் பிறகு எந்த வேலையையும் ஆர்வமாக செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.
இணையத்தில் உலவுதல்
வீட்டில் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடாமல் செல்போனில் பொழுதை போக்குவது, சமூக வலைத்தளங்களில் உலவுவது மோசமான முன் மாதிரியாக அமையும். குழந்தைகளும் அதனை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.
அதனை தவறு என்று சுட்டிக்காட்டும் பட்சத்தில் பெற்றோரும் அவ்வாறுதானே நடந்து கொள்கிறார்கள், நம்மை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் மனோபாவம் அவர்களிடத்தில் மேலோங்கிவிடும்.
மோசமான நிதி நிலையை கையாள்தல்
குடும்பத்தின் வரவு செலவு குறித்து குழந்தைகள் முன்பு விவாதிக்கலாம். நிதி பற்றாக்குறை குறித்தும், வீண் செலவுகள் குறித்தும் ஆலோசிக்கலாம். ஆனால் நிதி தட்டுப்பாட்டுக்கு ஒருவரையொருவர் குறை சொல்லி குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடக்கூடாது.
அது குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கும். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பெற்றோரிடம் பணம் கேட்பதற்கு குழந்தைகள் தயங்கும் நிலைமையை உருவாக்கிவிடும்.