கல்யாண வீட்டு ஸ்டைல் பாதாம் அல்வா!

Maalaimalar

தேவையான பொருட்கள்

  • பாதாம் பருப்பு - 1 கப்

  • சர்க்கரை - 1 முதல் 1.5 கப்

  • நெய் - 1 கப்

  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

  • சுடுதண்ணீர் / பால் - அரைக்கத் தேவையான அளவு

பாதாமை வேகவைக்க

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் பாதாமை அதில் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் வேக வைக்க வேண்டும்.

தோலை உரிக்க

இரண்டு நிமிடம் வெந்ததும் பாதாமை வெளியில் எடுத்துவிடவும். பாதாமின் மேல் தோல் சுருங்கி இருக்கும், அதை கைகளாலேயே மிக எளிதாக உரித்து எடுத்துவிடலாம்.

அரைக்கும் பக்குவம்!

தோல் நீக்கிய பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் அல்லது பால் தெளித்து மிக நைஸான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கலவை கொரகொரப்பாக இருக்கக் கூடாது.

குங்குமப்பூ ஊறவைக்க

அல்வாவுக்கு நல்ல பாரம்பரியமான மஞ்சள் நிறம் கிடைக்க, ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சிறிதளவு சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து தனியாக ஊற வைக்கவும்.

கடாயில் கிளறத் தொடங்கவும்!

ஒரு தடிமனான கடாயில் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதைச் சேர்த்து மிதமான தீயில் கிளறத் தொடங்குங்கள். கலவை சூடாகச் சூடாக மெதுவாகக் கெட்டியாகத் தொடங்கும்.

சர்க்கரை சேர்க்கும் நேரம்

பாதாம் விழுது ஓரளவுக்கு வெந்து கெட்டியானதும், அதனுடன் தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். சர்க்கரை உருகி கலவை மீண்டும் இளகி வரும்.

நெய் மற்றும் குங்குமப்பூ நீர்

கலவை சுருண்டு வரும்போது, நாம் ஊற வைத்துள்ள குங்குமப்பூ தண்ணீரையும், எடுத்து வைத்துள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்வாவின் பக்குவம்

அல்வா நன்றாக வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். சிறிதளவு அல்வாவை எடுத்து விரல்களால் தொட்டுப் பார்க்கும்போது, அது விரலில் ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒட்டினால் இன்னும் வேக வேண்டும் என்று அர்த்தம்.

மணக்கும் பாதாம் அல்வா ரெடி!

கடாயின் ஓரங்களில் நெய் பிரிந்து, சரியான அல்வா பதத்திற்குத் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்குங்கள். நாவில் கரையும் பாதாம் அல்வா தயார்!