

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அதிக அளவில் வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலிபிரி முதல் கருடன் சிலை வரை வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. அதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 87,759 பேர் தரிசனம் செய்தனர். 42,043பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.