சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்

சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்
Published on

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

நாளை (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், நாளைமறுநாள் (5-ந் தேதி) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com