கொல்லப்பட்ட 4 மாதங்களுக்கு பின் லெபனானில் நடைபெறும் 'ஹசன் நஸ்ரல்லா' இறுதிச்சடங்கு - பலர் பங்கேற்பு

பெய்ரூட்டில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார் சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் ஒருபோதும் நசுக்க முடியாது
கொல்லப்பட்ட 4 மாதங்களுக்கு பின் லெபனானில் நடைபெறும் 'ஹசன் நஸ்ரல்லா' இறுதிச்சடங்கு - பலர் பங்கேற்பு
Published on

லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகின்றன. 

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையில் இருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.

இதில் லெபனான் பொதுமக்கள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். சுமார் 4 மாத தாக்குதல்களுக்கு பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதற்கிடையே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச் அழைப்பு விடுத்தார்.

இதில் லெபனான் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஷியா அமைப்புகளும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகீர் கலிபாப்பும் இதில் பங்கேற்பார்கள். இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு அதன் அரசியல் வலிமையை நிரூபிக்கும் நிகழ்வாக இருக்கும்.

ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, அந்தக் குழுவை ஒரு இராணுவ அமைப்பாகவும், லெபனானில் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கினார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு மக்களை வேண்டுகோள் விடுத்த ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் அலி டாமோச், "நமது எதிர்ப்பு வலுவானது, போர்க்களத்தில் நமது எதிர்ப்பு நிலைத்திருக்கும், சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் அதை ஒருபோதும் நசுக்க முடியாது என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வீடு, கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com