வரலாறு காணாத சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை.. மருந்து குடிச்சுதான் ஆகணும் என்கிறார் டிரம்ப்

சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்
வரலாறு காணாத சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை.. மருந்து குடிச்சுதான் ஆகணும் என்கிறார் டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987 க்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.

ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

 இந்நிலையில் அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறினார்.

இதற்கிடையே தனது சொந்த சமூக ஊடகமாக ட்ரூத் சோசியலில் இன்று அவர் வெளியிட்ட பதிவில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

மேலும் பார்ப்பதற்கு ஒரு அழகான விஷயம். தூங்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் காலத்தில் இந்த நாடுகளுடனான உபரி வளர்ந்துள்ளது. நாம் அதை மாற்றப் போகிறோம், விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்! என்று பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக டிரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com