"260 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்து, விமானியின் திட்டமிட்ட செயல்" - இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை

2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழக்க வாய்ப்பில்லை.விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன.
"260 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்து, விமானியின் திட்டமிட்ட செயல்" - இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை
Published on

கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது என்று முதற்கபட்ட ஆய்வில் தெரியவந்தது.

விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் அதை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் வன்மையாக மறுத்துள்ளனர். விமானத் தயாரிப்பு நிறுவனத்தையும் விமான நிறுவனத்தையும் காப்பாற்றவே இறந்த விமானிகள் மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com