கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நாளை மறுநாள் சந்திக்கும் விஜய்?

கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நாளை மறுநாள் சந்திக்கும் விஜய்?
Published on

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும் அவர்களது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து கடந்த 17-ந் தேதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றனர். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தேதியானது விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 41 பேர் இறந்து வருகிற திங்கட்கிழமையுடன் ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com