கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காதது ஏன்? புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன் கேள்வி

வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏராளமானோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காதது ஏன்? புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன் கேள்வி
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட ஏராளமானோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இந்த வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையையொட்டி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கனகராஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட நீதிபதி முரளிதரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வக்கீல், வழக்கு தொடர்பாக செல்போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கேட்டிருப்பதாகவும், இன்னும் அங்கிருந்து தகவல்கள் வராததால் தாமதமாகி வருவதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டுக்கொண்ட நீதிபதி முரளிதரன் வழக்கு விசாரணையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com