'ஈர சாக்கை காலில்போட்டு கம்பியால் ஓங்கி அடித்தார்கள்' - இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு காவல்துறையே காரணம்?

ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் வலது காலில் ஓங்கி அடித்தார்கள். கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றார்கள்
'ஈர சாக்கை காலில்போட்டு கம்பியால் ஓங்கி அடித்தார்கள்' - இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு காவல்துறையே காரணம்?
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கொடுத்த வாக்குமூலங்கள் வெளியாகி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் மார்ச் 6 அன்று கைது செய்தனர். இதில் கைதின்போது கால்முறிந்த ஆகாஷ் என்ற இளைஞர் சிகிச்சையில் இருந்தநிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், போலீசார்தான் அவரை அடித்துக் கொன்றுள்ளனர் எனவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார். தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆகாஷின் உடலை உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டது. 

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர் ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குமூலத்தில்,

"எனது கெண்டை காலிற்கு கீழேயும், முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து ரத்தம் வந்தது. வலியில் துடித்தேன். பின்னர் போலீசார் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றார்கள். கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்" என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com