மதுரையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்ட விஜய்- வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
மதுரையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்ட விஜய்- வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு
Published on

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.

விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.

மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,

சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.

நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.

ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.

விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com