கரூரில் நாளை விஜய் பிரசாரம்: த.வெ.க.வினர் கேட்ட இடங்களில் அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு

விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
கரூரில் நாளை விஜய் பிரசாரம்: த.வெ.க.வினர் கேட்ட இடங்களில் அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு
Published on

கரூர்:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் காவல்துறையினர் பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்க இயலும் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினர் கேட்ட விபரங்களை நிர்வாகிகள் மூலம் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அவ்வாறு வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்படும பட்சத்தில் நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல்லில் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் இதுவரை இறுதி செய்யப்படாமல் உள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியத்துக்குள் விஜய் பேசும் இடம் உறுதி ஆகும் என காவல்துறை மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com