மிக கனமழை எச்சரிக்கை - கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை

வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை - கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை
Published on

கோவை:

வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கடக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 16-ந் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து இந்த 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு இன்று தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்.

அதன்படி கோவை மாவட்டத்திற்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையினர், 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையில் 30 பேர் உள்ளனர். இவர்கள் இன்று கோவை வந்து, அங்கிருந்து அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதியான வால்பாறைக்கு செல்கின்றனர்.

இதேபோல் 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் மதியம் கோவைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழை, வெள்ளத்தின் போது மக்களை காக்க வேண்டிய உபகரணங்கள், படகு, கயிறு மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கான ராட்சத கருவிகள் உள்பட பல்வேறு உபரகணங்களையும் எடுத்து கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். அங்கு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, மழை வெள்ளத்தின்போது மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்திற்கு 3 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தர உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் அதிகம் மழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை, நீலகிரியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அப்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இந்த 2 மாவட்டங்களிலும் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரிடர் மீட்பு படையினர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com