MRTS| வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் சேவை நாளை தொடக்கம்

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடியாக பறக்கும் ரெயிலில் செல்ல முடியும். தென்சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
MRTS| வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் சேவை நாளை தொடக்கம்
Published on

சென்னை:

சென்னையில் பயணிகளால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் கடந்த செவ்வாய்கிழமை அன்று தொடங்கப்பட இருந்தது. ஆனால், ரெயில்வே பாதுகாப்பு ஆணையரால் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக தள்ளிப்போனது.

5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தாமதமாகி வந்த இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தண்டவாள அமைப்பு, மின்மயமாக்கல், சிக்னல் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கடந்த 5-ந்தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட 3 பறக்கும் ரெயில் நிலையங்களிலும் அதிவேக சோதனையை ஆய்வு செய்தார். 10-ந்தேதி முதல் பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பறக்கும் ரெயில் சேவை தொடர்பாக நடந்த ஆய்வின்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இதனால் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் வரை பறக்கும் ரெயில் சேவையை தொடங்க முடியாது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், வேளச்சேரி- பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் சேவை நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிமலை பகுதி மக்களின் நீண்ட நாள் கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சேவை காரணமாக சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடியாக பறக்கும் ரெயிலில் செல்ல முடியும். மேலும் தென்சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். பயண நேரமும் கணிசமாக குறையும். புறநகர் மின்சார ரெயிலிலும் எளிதாக மாறிச்செல்ல முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com